





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்க்க மாட்டான், இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் அல்லாஹ் அடியார்களின் தோற்றமானது, அழகானதா, அல்லது அசிங்கமானதா? அவர்களின் உடல்கட்டமைப் பானது பெரியதா (கொழுத்ததா) அல்லது சிறியதா?(ஒல்லியானதா) அல்லது ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமற்றதா? என்பதை பார்க்கமாட்டான் என தெளிவுபடுத்துகி றார்கள். மேலும் அவர்களிடத்தில் உள்ள செல்வம் அதிகமானதா? அல்லது குறைவானதா என்பதையும் பார்க்கமாட்டான். அத்துடன் அல்லாஹ் தனது அடியார்களை இவ்வாறான விடயங்களில் மிகப்பெரும் இடைவெளி இருப்பதால் இவற்றை அளவு கோளாகக் கொண்டு விசாரித்து தண்டிப்பதோ வெகுமதிகள் வழங்குவதோ இல்லை. மாறாக அவர்களின் உள்ளத்தையும் அவர்களின் உள்ளம் கொண்டுள்ள இறையச்சம், ஆழமான நம்பிக்கை, உண்மை, உளத்தூய்மை அல்லது முகஸ்துதி, உளத்தூய்மை யின்மை போன்ற விடயங்களை அவதானித்தும் அவர்களின் செயல்கள் சீறானதா சீறற்றதா, என்பதை கருத்திற்கொண்டும்தான் அவர்களுக்கு கூலியும் வெகுமதியும் வழங்குகிறான்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது வெண்ணிற ஆடையும், கரு நிற முடியும் கொண்ட ஒரு மனிதர் எங்கள் முன் வந்து நின்றார். பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும், இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள் 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறை வேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். அவர் கேள்வி கேட்பதும் அதனை அவரே உண்மைப்படுத்துவதும் எம்மை ஆச்சரியத்திற்குற் படுத்தியது. பின்னரவர் 'ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்றும் நம்புவதுமாகும்' என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பதில் கூற, இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். தொடர்ந்து அவர் 'இஹ்ஸான் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்' எனச் சொன்னார்கள். பின்னர் அவர் 'எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'இந்தக் கேள்வியைக் கேட்பவரை விட கேட்கப்படுபவர் அதிகமாக அறிந்தவர் அல்லர்' என்றார்கள். (அதாவது அல்லாஹ் மாத்திரமே அதன் நேரத்தை அறிவான்). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்' என்றார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். நான் அங்கேயே சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனிதரின் தோற்றத்தில் ஸஹாபாக்களிடம் வருகை தந்தார் என உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். அவரின் ஆடை கடுமையான வெண்மையும், தலை முடி கடுமையான கரு நிறமும் கொண்டதாக இருந்தது. அத்துடன் பயணம்செய்தவரிடம் காணப்படும் களைப்பு, தூசுபடிதல், முடிபரந்திருத்தல், ஆடை அழுக்காக இருத்தல் போன்ற அடையாளங்கள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. நபியவர்களிடம் சமூகம் தந்து அமர்ந்திருந்தோர் யாரும் அவரை தெரிந்திருக்கவுமில்லை. வந்தவர் நேரே நபியவர்களிடம் சென்று மாணவன் ஒருவன் அமரும் முறையில் நபியவர்களிடம் அமர்ந்து இஸ்லாம் பற்றி வினவினார். அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் ஏற்று சாட்சி கூறுதல், ஐவேளைத் தொழுகைகளை பேணித் தொழுதல், ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குதல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், சக்தியுள்ளோர் ஹஜ்ஜை நிறைவேற்றல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதே இஸ்லாம் எனப் பதிலளித்தார்கள். உடனே கேள்வி கேட்டவர் நீங்கள் உண்மை சொன்னீர்கள் எனக் கூறினார். தனக்குத் தெரியாததைக் குறித்து கேட்டுவிட்டு பின்னர் அதனை உண்மைப்படுத்துவது ஸஹாபாக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து ஈமான் குறித்து வினவினார். அதற்கு நபியர்கள் ஈமான் உள்ளடக்கியிருக்கும் ஆறு அம்சங்களையும் குறிப்பிட்டார்கள். முதாலாவது : அல்லாஹ்வின் இருப்பையும் அவனின் பண்புகளையும் விசுவாசித்தல், படைத்தல் போன்ற விடயத்தில் அவனை ஒருப்படுத்துதல், வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செலுத்துதல். இரண்டாவது : ஒளியினால் படைக்கப்பட்டடுள்ள மலக்குகள் அல்லாஹ்வின் கண்ணியமிக்க அடியார்கள், அவர்கள் ஒரு போதும் அல்லாஹ்விற்கு மாறு செய்யமாட்டார்கள், அவனின் கட்டளைப்பிரகாரமே செயற்படுவர்கள் என்ற மலக்குமார்களை ஈமான் கொள்வது. மூன்றாவது : அல்லாஹ்வினால் இறைத்தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களான அல் குர்ஆன் இன்ஜீல் தவ்ராத் போன்றவற்றை ஈமான் கொள்வது. நான்காவது : அல்லாஹ்விடமிருந்து அவ்வேதங்களையும் மார்க்கத்தையும் பெற்று அவற்றை எத்திவைத்த தூதுவர்களான நூஹ், இப்ராஹீம் மூஸா ஈஸா அலைஹிமுஸ்ஸலாம், இறுதித்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆகியோரையும் ஏனைய நபிமார்களையும் விசுவாசித்தல். ஐந்தாவது : மறுமை நாளை ஈமான் கொள்வது, இதில் மரணத்திற்கு பின்னுள்ள மண்ணறை மறை வாழ்வையும், மனிதன் மரணத்தின் பின் விசாரிக்கப்பட்டு ஒன்றில் சுவர்க்கம் அல்லது நரகம் செல்வான் என்பதையும் இந்தப்பகுதி உள்ளடக்கியுள்ளது. ஆறாவது: அல்லாஹ் அவனின் முன்னறிவின் பிரகாரம் தீர்மானித்து விதித்த விதியை ஈமான் கொள்வது, இதில் அல்லாஹ் தான் முன்னறிவின் படி விதித்துள்ள விடயங்களையும், விதித்த அந்த விடயங்களில் ஆழ்ந்த நோக்கமுள்ளது என்பதையும், அது நிகழ்வதற்கு அவனின் நாட்டமும் தேவை என்பதையும், விதித்த விடயங்கள் யாவும் அவன் விதித்தபடி நடைபொறும் என்பதையும், இப்பிரபஞ்ஞத்தில் நிகழும் அனைத்து விடயங்களையும் பற்றிய முழுமையான அறிவு அல்லாஹ்விடத்தில் உள்ளது என்பதையும் இது உள்ளடக்கியுள்ளது. தொடர்ந்தும் அவர் இஹ்ஸான் குறித்து கேட்டார் அதற்கு நபியவர்கள் இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ காண்பது போல் வணங்குவீராக. ஆக இந்த (நிலையை) அந்தஸ்தை எய்துகொள்ள முடியவில்லை என்றால் அல்லாஹ்வை அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவீராக. இதில் முதலாவது நிலையானது நேரடியாகப் பார்த்தல் என்ற அந்தஸ்தையும் இரண்டாவது அவதானம் எனும் அந்தஸ்தையும் குறிக்கிறது. பின்னர் அவர் மறுமை நாள் எப்போது நிகழும்? என வினவினார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை நாள் நிகழ்வது குறித்த அறிவை அல்லாஹ் மாத்திரமே பெற்றுள்ளான்.(தனதாக்கிக் கொண்டுள்ளான்) அவனின் படைப்புகளில் எவரும் அது குறித்து அறியமாட்டார்கள். கேள்விகேட்டவரும் கேட்கப் பட்டவரும் இதில் விதிவிலக்கானோர் அல்லர். அவர்களும் அதனை பற்றி அறியமாட்டார்கள் என தெளிவு படுத்தினார்கள். பின்னர் அவர் மறுமை நாளின் அடையாளங்கள் குறித்துக் கேட்டார். அதற்கு நபியவர்கள், அடிமைப் பெண்களும் அவர்களது பிள்ளைகளும் அதிகரித்தல், அல்லது பிள்ளைகள் தமது தாய்மார்களை அடிமைகளைப் போன்று நடத்துதல், ஆடு மேய்க்கக் கூடிய சாமான்ய வறியவர்களுக்கு இறுதிக் காலங்களில் வசதி ஏற்பட்டு மாடமாளிகைகளைக் கட்டுவதில் போட்டிபோட்டு, பெருமைப் பட்டுக்கொள்ளுதல் போன்றவை அதன் அடையாளங்களில் சில என நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவர் ஜிப்ரீல் என்றும் அவர் புனித இம்மார்க்கத்தை ஸஹாபாக்களுக்கு கற்றுத்தர வந்தார் எனவும் தெரிவித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'யார் எம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய விடயம் ஒன்றை உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கத்தக்கதாகும்' (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). மற்றுமொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : 'நம்முடைய விடயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது நிராகரிக்கப்படும்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் இந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு காரியத்தை கண்டுபிடித்து உருவாக்குகிறாரோ அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தராத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப் படுவதோடு அல்லாஹ்விடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெளிவு படுத்துகிறார்கள்.
அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : உயர்ந்தோனாகிய கண்ணியமிக்க அல்லாஹ்விடமிருந்து அறியப் பெற்றதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர். எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது. என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை. எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ் அநியாயம் இழைப்பதை தன்மீது ஹராமாக்கிக் கொண்டதாகவும், அதனை தனது படைப்பினங்களுக்கு மத்தியிலும் ஹராமாக்கியுள்ளதாகவும் தெளிவுபடுத்துகிறார்கள். ஆகவே ஒருவர் மற்றவருக்கு அநியாயம் இழைக்க வேண்டாம். அல்லாஹ்வின் வழிகாட்டலையும் அதற்கான வாய்ப்பையும் பெறாத அடியார்கள் அனைவரும் சத்தியப்பாதையைவிட்டும் தடம்புரண்டவர்களாக உள்ளனர். யார் அல்லாஹ்விடம் நேரான வழியை வேண்டுகிறானோ அவனுக்கு அல்லாஹ் நேரான பாதையை காட்டி அதற்கான வாய்ப்பையும் அளிக்கிறான். அடியார்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அல்லாஹ்விடம் தேவையுடயவர் களாக உள்ளனர் . எனவே யார் அல்லஹ்விடம் தனது தேவையை நிறைவேற்றித்தருமாறு கோருகிறனோ அவனின் தேவையை நிறைவேற்றி அவனை தன்னிறைவுள்ளவனாக மாற்றுகிறான். அவர்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறார்கள். அடியான் தனது இரட்சகனான அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அதனை அல்லாஹ் மறைத்து மன்னித்து விடுகிறான். அடியார்கள் அனைவரும் (தமது சொல், செயல்களால்) அல்லாஹ்வுக்கு நலவோ, கெடுதியோ செய்ய அவர்களால் ஒரு போதும் முடியாது. அவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு மிக அஞ்சிய ஒருவருடைய உள்ளத்தின் பெயரில் இருந்தாலும், அவர்களுடைய இறையச்சம் அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் சிறிதளவையேனும் அதிகரிக்க செய்வதில்லை. அவர்கள் அனைவரும் மிகமோசமான பாவியுடைய உள்ளத்தை கொண்டிருந்தாலும் அவர்களுடைய பாவங்கள் அவனது ஆட்சியதிகாரத்தில் சிறிதளவையேனும் குறைக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் எல்லா நிலமைகளிலும், காலங்களிலும், இடங்களிலும் அவன்பால் தேவையுடைய வறியவர்களாக உள்ளனர். அல்லாஹ்வே எவ்விதத் தேவையுமற்றவனாவான்-அவன் தூய்மையானவன்- ஜின் மற்றும் மனித இனம் அனைவரும் அவர்களில் முன்பிருந்தோரும் தற்போது இருப்போரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு, அவர்கள் கேட்ட அனைத்தையும் அவன் கொடுத்தாலும் அவனிடத்தில உள்ளவற்றில் சிறிதளவேனும் குறைய மாட்டாது. கடலுக்குள் இடப்பட்டு வெளியே எடுத்த ஊசியைப் போல், இதன் மூலம் கடலில் எதுவும் குறைந்து விடுவதில்லை. இதுபோல்தான் அல்லாஹ் தன்னிறைவானவன், எதுவும் தேவையற்றவன். அல்லாஹ் அடியார்களின் அனைத்து செயல்களையும் பாதுகாத்து, அவர்களது நன்மை, தீமைகளைக் கணக்கிட்டு வைக்கின்றான். பின் மறுமையில் அதனடிப்படையில் கூலி வழங்குகிறான். தனது செயல்களுக்குரிய கூலியை நன்மையாக கண்டுகொண்டவர் (சுவனத்தைப் பெற்றுக் கொண்டவர்) அல்லாஹ் அவனுக்கு வழிப்படும் நற்பாக்கியத்தை அளித்தமைக்காக அவனைப் புகழட்டும், இவையல்லாத தண்டனைகளைக் கூலியாப் பெற்றவர் தன்னை நஷ்டத்தின் பால் தூண்டிய தனது ஆன்மாவையே நொந்து கொள்ளட்டும்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சிறுவராக இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சவாரி செய்கையில் நான் உமக்கு பயனுள்ள சில விடயங்களை கற்றுத்தரப்போகிறேன். அல்லாஹ் அதனை பயனுள்ளதாக ஆக்கித்தர வேண்டும் என அவரிடம் கூறினார். அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணி விலக்கள்களை தவிரந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வை பேணி நடப்பீராக. அதாவது உன்னை அவன் வழிபாட்டிலும் வணக்கங்களிலும் காண வேண்டும். பாவத்திலும் குற்றங்களிலும் காணக்கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் உம்மை அல்லாஹ் இம்மை, மறுமை பேராபத்திலிருந்து பாதுகாப்பது உமக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் கூலியாக அமைந்துவிடும். அதே போல் நீ எங்கு சென்றாலும் உமது காரியங்களில் அவன் ஒத்தாசை வழங்குவான். நீ ஏதாவது ஒன்றை கேட்டால் அல்லாஹ்விடமே கேள், அவன் கேட்போரின் கோரிக்கைகளை ஏற்று பதிலளிப்பவனாக உள்ளான். உமக்கு உதவி தேவைப்பட்டால் அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி கோருவீராக. ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உமக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உமக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை கொண்வராக இருப்பீராக! இந்த விவகாரத்தை அல்லாஹ் அவனின் அறிவிற்கும், ஞானத்திற்கும் ஏற்ப அவனே தீர்மானித்து எழுதிவிட்டான். ஆகவே அவனால் விதித்து எழுதப்பட்டவற்றை மாற்ற முடியாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர' என்று கூறினார்கள். அதற்கு 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர்கள்; யார்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்சத்தியத்தை விட்டு விலகி, நபியவர்களின் வழிமுறையை கடைப்பிடிக்காது நடந்தோரைத் தவிர மற்ற அனைவரும் தனது சமூகத்தில் சுவர்க்கம் செல்வார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீதிஸில் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு கூறியபோது ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! விலகிக்கொண்டோர், அல்லது தவிர்ந்து கொண்டோர் என்பவர்கள் யார்? என வினவினார்கள். உடனே அதற்கு யார் நபியவர்களுக்கு கட்டுப்பட்டு, அவரைப் பின்பற்றி ஒழுகுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வார். யார் நபிவர்களுக்கு மாறு செய்து அவர் கொண்டுவந்த மார்க்க சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாது நடக்கிறாரோ அவர் தனது தவறான செயற்பாடுகளின் காரணமாக சுவர்க்கம் நுழைவதிலிருந்து விலகிக் கொள்வார் என நபியவர்கள் பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறினார்கள் : யார் எந்த சமூகத்திற்கு ஒப்பாக நடப்பாரோ அவர் அச்சமூகத்தைச் சேர்ந்தவராவர்
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுயார் ஒருவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கே உரிய தனித்துவமான நம்பிக்கைள் அல்லது வணக்க வழிபாடுகள் அல்லது வழக்காறுகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றிச் செய்வதன் மூலம் அவர்களில் உள்ள இறைநிராகரிப்பாளர்கள் அல்லது மோசமான தீய விடயங்களில் ஈடுபடுவோர் அல்லது அந்த சமூகத்தில் உள்ள நல்லோர்களுக்கு-ஆன்மீகவாதிகளுக்கு- ஒப்பாக நடந்து கொள்கின்றாறோ அவரும் அவர்களைச் சார்ந்தோரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ஏனெனில் புறத்தோற்றத்தில் காபிர்களுக்கு ஒப்பாக நடத்தல் உள்ரங்கத்தில் ஒப்பாக நடக்க வழிவகுத்துவிடும். ஒரு சமூகத்துக்கு ஒப்பாக நடத்தல் என்பது அந்த சமூகத்தின் மீதுள்ள கவர்ச்சியின் விளைவாக ஏற்படுவதாகும். இது அவர்களை நேசம் கொள்வதற்கும், அவர்களை கண்ணியப்படுத்து வதற்கும், அவர்களை சார்ந்து வாழ்வதற்கும் சில வேளை வழிவகுத்துவிடுவதோடு, உள்ரங்கத்திலும் வணக்கத்திலும் அவர்களுக்கு ஒப்பாக நடப்பதற்கு இட்டுச்சென்று விடுகிறது. அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக!
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்' என்று பதிலளித்தார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்றேன். 'உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது' என்றார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பாவங்களில் மிகப்பெரியது குறித்து வினவப்பட்டது; அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: பெரும்பாவங்களில் மிகவும் பெரியது பெரிய இணைவைப்பாகும். பெரிய இணையென்பது அல்லாஹ்வுக்கு அவனின் உலூஹிய்யாவிலும், ருபூபிய்யாவிலும், அவனுக்கேயுரிய பெயர்களிலும் பண்புகளிலும் நிகர் அல்லது உவமையான விடயங்களை ஏற்படுத்துவதாகும். இக்குற்றத்தை அல்லாஹ் தவ்பாவின் மூலம் மாத்திரமே மன்னிப்பான். இதே பாவத்தில் -இணைவைப்பில்- ஒருவர் மரணித்துவிட்டால் அவர் நிரந்தர நரகில் இருப்பார். இரண்டாவது : ஒருவர் தனது பிள்ளையை அவரோடு உணவைப் பங்குபோட்டு உண்ணும் என்ற பயத்தில் கொலை செய்வதாகும். ஓர் உயிரை கொலை செய்வது ஹராமாகும். அதுவே கொலைசெய்யப்பட்டவர், கொலையாளியின் உறவுக்காரராக இருந்தால் பாவத்தின் கொடூரம் இன்னும் அதிகமாகும். அதுவே அல்லாஹ் வாழ்வாதாரத்தின் வழியை இவரது வழியில் வைத்திருக்க, அதைத் துண்டிக்கும் நோக்கில் கொலை செய்தால் பாவத்தின் வீரியம் இன்னும் அதிகரிக்கும். பின்னர் தனது அயலவரின் மனைவியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும். அதாவது அயலவரின் மனைவியை மயக்கி அவளை அடிபணிய வைத்து அவளுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகும். விபச்சாரம் ஹராமாகும். அதுவே உபகாரம், நலவு செய்யுமாறும், நல்ல நட்புடன் இருக்குமாறும் மார்க்கம் உபதேசித்துள்ள அயலவரின் மனைவியுடன் இருந்தால் பாவத்தின் கனதி இன்னும் கடுமையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்கொண்டவரே இவர்கள் இருவரில் சிறந்தவராவார்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று தினங்களுக்கு மேல் வெறுத்து, ஒருவர் மற்றவரை சந்தித்தும் ஸலாம் கூறாமல், கதைக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். பகைத்துக்கொண்ட அவ்விருவரில் மிகவும் சிறப்புக்குரியர் தனது சகோதரனுடனான மனவெறுப்பை அகற்றிக்கொள்வதற்காக ஸலாம் கூறுவதில் முந்திக்கொண்டவராவார். இங்கு ஹஜ்ர்- வெறுத்தல்-புறக்கணித்தல்- என்பது ஒருவரின் சொந்த நலனுக்காக வெறுப்பதைக் குறிக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் உரிமையுடன் தொடர்புடைய, பாவிகள், பித்அத் செய்வோர் தீய நண்பர்கள் ஆகியோரை வெறுத்து நடப்பதில் குறிப்பிட்ட கால வரையறை கிடையாது. காரணம் குறிப்பிட்ட நலனானது புறக்கணித்தல் என்பதுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட இப்பாவங்கள் எப்போது அவர்களைவிட்டு நீங்கி விடுகிறதோ அப்போது வெறுத்து நடத்தல் என்ற விடயமும் நீங்கிவிடுகிறது.