





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு ஜனாஸா வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், 'என்னை முற்படுத்துங்கள்' என்று கூறும். அது நல்லதற்றதாக இருந்தால், 'அதற்கேற்பட்ட கேடே! அதை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்துமே கேட்கும். அதை மனிதன் கேட்டுவிட்டால், மூர்ச்சையடைந்து விடுவான்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்இங்கு நபி (ஸல்) அவர்கள், ஒரு ஜனாஸா கட்டிலில் வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் தமது தோல்களில் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், தான் தனது முன்னால் காணும் இன்பங்களை நோக்கி, தன்னை முற்படுத்துங்கள் என்று கூறும். அது நல்லதற்றதாக இருந்தால், தனக்கு முன்னால் காணும் வேதனைகள் காரணமாக, மோசமான ஒரு சப்தத்தில், 'அதற்கேற்பட்ட கேடே! அதை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்துமே கேட்கும். அதை மனிதன் கேட்டுவிட்டால், அந்த சப்தத்தின் அகோரத்தின் காரணமாக மூச்சையடைந்து விடுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூற, தாம் கேட்டதாக மிக்தாத் இப்னுல் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: மறுமையில் சூரியன் படைப்புக்களுக்கு ஒரு 'மீல்' அளவு நெருக்கமாக இருக்கும் அளவு நெருக்கமாக்கி வைக்கப்படும். (ஸுலைம் இப்னு ஆமிர் அவர்கள் கூறுகின்றார்கள் : மீல் என்பதன் மூலம் நாடப்படுவது, நில அளவீடுகளில் ஒன்றான மைலா? அல்லது கண்ணுக்கு சுர்மா இடப் பயன்படும் குச்சியான மீலா? என்பதை நான் அறியமாட்டேன்!) நபியவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மக்கள் தமது செயற்களுக்கு ஏற்ப வியர்வையில் இருப்பார்கள். சிலரது வியர்வை கணுக்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை முழங்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை இடுப்பு வரை இருக்கும். சிலரை வியர்வை (அவர்களது வாயைக்) கடிவாளம் இடும் அளவு வாய் வரை வந்திருக்கும். இவ்வாறு கூறிவிட்டு நபிவர்கள் தமது வாய் நோக்கி சைகினை செய்து காட்டினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், மறுமையில் சுவனம் படைப்புக்களின் தலையில் இருந்து ஒரு 'மீல்' அளவு நெருக்கமாக இருக்கும் அளவு நெருக்கமாக்கி வைக்கப்படும் என்று அறிவிக்கின்றார்கள். ஸுலைம் இப்னு ஆமிர் எனப்படும் தாபிஈ அவர்கள் கூறுகின்றார்கள் : மீல் என்பதன் மூலம் நாடப்படுவது, நில அளவீடுகளில் ஒன்றான மைலா? அல்லது கண்ணுக்கு சுர்மா இடப் பயன்படும் குச்சியான மீலா? என்பதை நான் அறியமாட்டேன்! நபியவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மக்கள் தமது செயற்களுக்கு ஏற்ப வியர்வையில் இருப்பார்கள். சிலரது வியர்வை கணுக்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை முழங்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை வேட்டிகளைக் காட்டும் இடமான இடுப்பு வரை இருக்கும். சிலரது வியர்வை அவரது வாய் வரை வந்து அவரைப் பேசாவிடாமல் தடுக்கும். இவ்வாறு கூறிவிட்டு நபிவர்கள் தமது வாய் நோக்கி சைகினை செய்து காட்டினார்கள்
அபூபுர்தா இப்னு அபீமூஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூமூஸா (ரழி) அவர்கள் கடுமையான நோயால் மயக்க மடைந்துவிட்டார்கள். அவர்களின் தலை அன்னாருடைய மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்தபோது,எவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரிடமிருந்து நானும் பொறுப்பை விலக்கிக்கொள்கிறேன் 'நபி (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். ' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அபூ புர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், அவரது தந்தை அபூ மூஸா அல்-அஷ்அரி (ரழி) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு சுயநினைவை இழந்திருந்தார். அவரது தலை அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மடியில் இருந்தது. அவள் சத்தமாக அழுது கொண்டிருந்தாள். ஆனால் அவர் மயக்கத்தில் இருந்ததால் அவளுக்கு ஏதும் கூற முடியவில்லை. அவர் சுயநினைவு திரும்பியபோது, அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரிடமிருந்து விலகிக்கொண்டார்களோ, அவர்களிடமிருந்து தானும் விலகிக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அவர்களின் விபரம் வருமாறு : 1-அஸ்-ஸாலிகா: சோதனையின் போது தனது குரலை உயர்த்தும் ஒரு பெண், அதாவது, சத்தமாகவும் உரத்த குரலிலும் அழும் ஒரு பெண். 2-அல்-ஹாலிகா: சோதனையின் போது தனது தலையை மொட்டையடிக்கும் ஒரு பெண். 3-அல்-ஷாக்கா: சோதனையின் போது தனது ஆடைகளைக் கிழிக்கும் ஒரு பெண். இவ்வாறான பழக்கவழக்கங்கள் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமை காலத்தில் இருந்துவந்தது. அதற்கு பதிலாக, துயரங்களின் போது பொறுமையாக இருந்து, அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிரபார்குமாறு கட்டளையிடப்பட்டிருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள்".
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு என தெளிவு படுத்துகிறார்கள் அவை பின்வருமாறு : முதலாவது : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அஸ்ஸலாமு அலைக்கும் என வாழ்த்து கூற வேண்டும். அவர் அதற்கு வஅலைக்குமுஸ்ஸலாம் என பதில் கூறுவார். இரண்டாவது : வலீமா –திருமணவிருந்து- போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக அழைத்தால் அவரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ளுதல். மூன்றாவது: ஏதாவது ஒரு விடயத்தில் அறிவுரை கேட்டால் அவருக்கு மனதார அறிவுரை கூறுங்கள். இந்த விடயத்தில் அவருக்கு ஏதாவது சலுகைக் காட்டி உண்மையை மறைக்கவோ அல்லது ஏமாற்றவோ கூடாது. நான்காவது: அவர் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுங்கள். அதற்கவர் யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் என்று பதிலுரைப்பார். ஐந்தாவது : அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரியுங்கள். ஆறாவது : அவர் மரணித்துவிட்டால் அவருக்கு தொழுகை நடாத்தி அவரை அடக்கம் செய்யும் வரை அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வது.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் மீண்டெழாத அந்த மரணப் படுக்கையில் இவ்வாறு கூறினார்கள் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும். அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகளை தொழுமிடங்களாக மாற்றிக் கொண்டார்கள்.' ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : அவ்வாறில்லாவிட்டால் அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும். எனினும், அது தொழுமிடமாக மாற்றப்படலாம் எனப் பயப்படப்பட்டது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் மீண்டெழாத அந்த மரணப் படுக்கையில் இவ்வாறு கூறினார்கள் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபித்து, தனத அருளை விட்டும் அவர்களைத் தூரப் படுத்தட்டும். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகள் மீது கட்டிடங்கள் கட்டியோ, அவற்றை நோக்கி அல்லது அவற்றிற்கு அருகாமையில் தொழுதோ அவற்றைத் தொழுமிடங்களாக மாற்றிக்கொண்டார்கள்.' பின்பு ஆஇஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நபியவர்களது இந்தத் தடையும் எச்சரிக்கையும் இல்லாவிட்டால், மேலும், யூத, கிறஸ்தவர்கள் தமது நபிமார்களின் கப்ருகளுக்குச் செய்ததது போன்று, நபியவர்களது கப்ருக்கும் செய்யப்படலாம் என்று நபித்தோழர்கள் பயப்படவும் இல்லையென்றிருந்தால், அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும்.
அபூ ஸஈத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யமனில் இருந்து அலி (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட ஒரு தோல்பையில் மண் நீக்கப்பட்டிராத சிறிய ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபியவர்கள் நால்வருக்குப் பங்குவைத்தார்கள். உயைனா இப்னு பத்ர், அக்ரஃ இப்னு ஹாபிஸ், ஸைத் அல் கைல், ஆகியோருடன், அல்கமா அல்லது ஆமிர் இப்னுத் துபைல் ஆகியோரே அந்த நால்வரும் ஆகும். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'இவர்களை விட இதைப் பெற நாமே தகுதியானவர்களாக இருந்தோம்.' என்று கூறினார். இது நபியவர்களுக்கு எட்டவே, நபியவர்கள், 'நீங்கள் என்னை நம்பமாட்டீர்களா? நான் வானத்தில் இருப்பவனிடம் நம்பிக்கைக்கு உரியவனாக உள்ளேன். காலையிலும், மாலையிலும் வானத்தின் செய்திகள் எனக்கு வருகின்றன.' என்று கூறினார்கள். அப்போது கண்கள் குழிவிழுந்த, கன்னங்கள் உப்பிய, அடர்த்தியான தாடியைக் கொண்ட, தலைமுடி மலிக்கப்பட்ட, கீழாடை வரிந்துகட்டப்பட்டிருந்த, ஒரு மனிதர் எழுந்து, 'அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்' என்று கூறினார். உடனே நபியவர்கள், 'உனக்குக் கேடு உண்டாகட்டும். பூமியில் உள்ளவர்களிலேயே அல்லாஹ்வை அஞ்சுவதற்கு அதிகம் கடமைப்பட்டவனாக நான் இல்லையா?' என்று கேட்டார்கள். பின்பு அந்த மனிதர் சென்றுவிட்டார். அப்போது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வுடைய தூதரே! அவருடைய கழுத்தை வெட்டட்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'இல்லை. அவர் தொழக்கூடியவர்களாக இருக்கலாம்' என்று கூறி விட்டார்கள். அப்போது காலித் இப்னுல் வலித் அவர்கள், 'தொழும் எத்தனையோ பேர், தமது உள்ளத்தில் இல்லாததை நாவினால் பேசுகின்றார்கள்' என்று கூறினார். உடனே நபியவர்கள், 'மக்களுடைய உள்ளங்களை ஆராய்ச்சி செய்துபார்க்குமாறும், அவர்களது வயிறுகளைப் பிளந்து பார்க்குமாறும் நான் ஏவப்படவில்லை.' என்று கூறினார்கள். பின்பு அம்மனிதர் திரும்பிச் செல்வதைப் பார்த்த நபியவர்கள், 'இந்த மனிதரின் சந்ததியில் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவர். ஆனால், அது அவர்களது தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லமாட்டாது. (எறியப்பட்ட அம்பு) வேட்டைப் பிராணியின் உடம்பில் இருந்து (அதைக் கிழித்துக்கொண்டு) வெளியேறுவதைப் போல, இவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிடுவார்கள்.' என்று கூறினார்கள். மேலும், 'அவர்களை நான் அடைந்துகொண்டால், ஸமூத் கூட்டத்தினர் அழிக்கப்பட்டதைப் போன்று, அவர்களை நான் அழித்துவிடுவேன்.' என்று நபியவர்கள் கூறியதாகவும் நான் நினைக்கின்றேன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்யமனில் இருந்து அலி (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட ஒரு தோல்பையில் மண் நீக்கப்பட்டிராத சிறிய ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபியவர்கள் நால்வருக்குப் பங்கு வைத்தார்கள். உயைனா இப்னு பத்ர், அக்ரஃ இப்னு ஹாபிஸ், ஸைத் அல் கைல் அந்நப்ஹானீ, அல்கமா இப்னு அல்லாஸா அல்ஆமிரீ ஆகியோரே அந்த நால்வரும் ஆகும். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், இவர்களை விட இதைப் பெற நாமே தகுதியானவர்களாக இருந்தோம் என்று கூறினார். இது நபியவர்களுக்கு எட்டவே, நபியவர்கள், 'நீங்கள் என்னை நம்பமாட்டீர்களர்? நான் வானத்தில் இருப்பவனிடம் நம்பிக்கைக்கு உரியவனாக உள்ளேன். காலையிலும், மாலையிலும் வானத்தின் செய்திகள் எனக்கு வருகின்றன.' என்று கூறினார்கள், அப்போது கண்கள் குழிவிழுந்து, வெளிப்பட்டிருந்த, கன்னங்கள் உப்பிய, நீளமற்ற அடர்த்தியான தாடியைக் கொண்ட, தலைமுடி மலிக்கப்பட்ட, உடலின் கீழ்ப்பகுதியை மறைக்கும் கீழாடை வரிந்துகட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் எழுந்து, 'அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் : 'உனக்குக் கேடு உண்டாகட்டும். பூமியில் உள்ளவர்களிலேயே அல்லாஹ்வை அஞ்சுவதற்கு அதிகம் கடமைப்பட்டவனாக நான் இல்லையா?' என்று கேட்டார்கள். பின்பு அந்த மனிதர் சென்றுவிட்டார். அப்போது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வுடைய தூதரே! அவருடைய கழுத்தை வெட்டட்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'இல்லை. அவர் தொழக்கூடியவர்களாக இருக்கலாம்' என்று கூறி விட்டார்கள். அப்போது காலித் இப்னுல் வலித் அவர்கள், 'தொழும் எத்தனையோ பேர், தமது உள்ளத்தில் இல்லாததை நாவினால் பேசுகின்றார்கள்' என்று கூறினார். உடனே நபியவர்கள், 'மக்களுடைய உள்ளங்களை ஆராய்ச்சி செய்துபார்க்குமாறும், அவர்களது வயிறுகளைப் பிளந்து பார்க்குமாறும் நான் ஏவப்படவில்லை. மாறாக, அவர்களது வெளிப்படையான விடயங்களை எடுக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்.' என்று கூறினார்கள். பின்பு அம்மனிதர் திரும்பிச் செல்வதைப் பார்த்த நபியவர்கள், 'இந்த மனிதரினதும் அவரது தோழர்களினதும் அல்லது அவரது கோத்திரத்தினதும் சந்ததியில் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை திறமையாகவும், இனிமையான குரலிலும் ஓதுவர். அதை அதிகம் ஓதுவதால் அவர்களது நாவு ஈரமாக இருக்கும். ஆனால், அது அவர்களது தொண்டைக் குழிகளைத் தாண்டி, உள்ளங்களை அடைந்து அதை சீர்த்திருத்த மாட்டாது. அவற்றை அல்லாஹ் உயர்வடையச் செய்யவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டான். (எரியப்பட்ட அம்பு) வேட்டைப் பிராணியின் உடம்பில் இருந்து (அதைக் கிழித்துக்கொண்டு) வெளியேறுவதைப் போல, இவர்கள் மார்க்கத்தை விட்டும் வேகமாகவும், இலகுவாகவும் வெளியேறி விடுவார்கள். மேலும், 'அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வால் ஏந்திப் போராடும் காலத்தை நான் அடைந்து கொண்டால், ஸமூத் கூட்டத்தினர் அழிக்கப் பட்டதைப் போன்று, அவர்களை நான் அழித்து விடுவேன்.' என்று நபியவர்கள் கூறியதாகவும் நான் நினைக்கின்றேன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில், அல்லாஹ் அவனிடம் உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான்.அவன் விரும்பிய பின்,அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா?என்று கேட்பான். அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, சுவர்க்கத்தில் நுழையும் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில், அல்லாஹ் அவனிடம், உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான். அவன் விரும்பிய பின், அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா? என்று கேட்பான். அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப் பட்ட) முன்கால் ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு கூறினார்கள்: நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். எதன் காரணமாக என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறுசிலரை நோக்கி) 'உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்க மாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறுசிலரிடம், '(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும் படி உத்தர விட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், '(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது' என்று கூறிவிட்டு, 'நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, 'நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதலாவது (முக்கிய) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!' என்று கூறிவிட்டு, 'நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்' என்பார்கள். (அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,) 'இப்ராஹீமே! நீங்கள் இறைத் தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே மக்களும் மூஸா (அலை) அவர்களிடம் சென்று, 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தனது தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தி யுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'இன்று என் இறைவன் (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே மக்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று, 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் குழந்தையாய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங் கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அப்போது மக்கள் என்னிடம் வந்து 'முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன், பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியணைக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்குமுன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு 'முஹம்மதே! சொர்க்கத்தின் வாயில்களில் வலப் பக்க வாயில் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாயில்களிலும் மக்களுடன் இணைந்து நுழையலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் 'மக்காவிற்கும் (யமனிலுள்ள) 'ஹிம்யர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது 'மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தமது தோழர்களுடன் ஒரு விருந்துபசாரத்தில் இருந்தார்கள். அப்போது (சமைக்கப்பட்ட) ஆட்டின் முன்கால் ஒன்று அவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. அதன் இறைச்சி அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள். பின்னர் நபியவர்கள் அவர்களிடம் பேசினார்கள். அல்லாஹ் தன்மீது புரிந்துள்ள அருளை வெளிப்படுத்திக் கூறும் முகமாக 'நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். என்று குறிப்பிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், பின்னர் அவர் கூறினார்: 'எதன் காரணமாக என்று உங்களுக்குத் தெரியுமா?' மறுமை நாளில் மக்கள் அனைவரும் விசாலமான, சமதரையான, மிகவும் நீண்ட ஒரே தளத்தில் ஒன்றுகூடச் சேர்க்கப் படுவார்கள். அங்கே இருப்பவர்கள் அனைவரும் அழைப்பவரின் குரலை தெளிவாகக் கேட்பார்கள்; பார்ப்பவரின் பார்வையிலிருந்து யாரும் மறைய முடியாது. நிலம் சமமாக இருப்பதால், யாரும் ஒளிந்து கொள்ள ஏதுவான இடமில்லை. பார்வை அனைவரையும் எட்டும். ஒருவர் பேசினால், அங்கே இருக்கும் கடைசி மனிதருக்குக் கூட அது கேட்கும். பார்வையும் அனைவரையும் அடையும். அப்போது சூரியன் படைப்புகளுக்கு ஒரு 'மீல்' அளவிற்கு நெருங்கிவரும். அதாவது சுர்மா பூசுவதற்கு பயன்படுத்தப்படும் குச்சியின் நீலத்திற்கு அளவாக மிக நெருக்கமாக சூரியன் கொண்டுவரப்படும். அதன் காரணமாக மக்கள் சகிக்க முடியாத அளவிற்கு துயரத்தையும் கவலையையும் துன்பத்தையும் அனுபவிப்பார்கள். அதனால் அவர்கள் விடுதலை பெறுவதற்காக தமக்கு ஷஃபாஅத் (பரிந்துரை) செய்வோரைத் தேடுவார்கள், அப்போது அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு, மனிதகுலத்தின் தந்தையான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துவான். அவர்கள் ஆதம் நபியிடம் சென்று, அவர்களின் சிறப்புகளைச் கூறி, 'நீங்கள் மனிதர்களின் தந்தை. அல்லாஹ் உங்களைத் தனது கையால் படைத்தான்; மலக்குகளை உங்களுக்கு முன் ஸஜ்தா செய்ய வைத்தான்; எல்லா பொருள்களின் பெயர்களையும் உங்களுக்கு கற்றுக்கொடுத்தான்; உங்களுள் அவனது உயிரை ஊதினான். ஆகவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், 'இன்று என் இறைவன் என்றுமே இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான்' என்று கூறுவார். பின்னர், அல்லாஹ் தடை செய்த மரத்திலிருந்து தாம் உண்ட தவறை நினைவு கூர்வார். அவர் தொடர்ந்தும் 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள். நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறுவார்: அவர்கள் பின்னர் நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் சென்று, 'நீங்கள் இந்தப் பூமியில் மக்களிடம் அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவிர். மேலும் அல்லாஹ் உங்களை 'நன்றியுள்ள அடியார்' என்று புகழ்ந்து அழைத்தான். ஆகவே எங்களுக்காக பரிந்துரை செய்யுங்கள்' என்று கேட்பார்கள் ஆனால் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பதிலளிப்பார்கள்: 'இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். அவன் எனது சமூகத்திற்காக ஒரு பிரத்தியேகமான துஆவை தந்தான் நான் அதனை என் சமூகத்தின்மேல் அழிவை வேண்டி செய்தேன். இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள்'. அவர்கள் பின்னர் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, 'நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் (கலீல்). எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று நீங்கள் காணவில்லையா?' என்று கேட்பார்கள்;. அதற்கு இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் கூறுவார்கள் இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். நான் மூன்று இடங்களில் (உண்மைக்கு எதிராக) பொய் கூறியுள்ளேன்'. அவை: 'நான் உடல்நலக்குறைவாக இருக்கிறேன்' என்று கூறியது. 'இந்தச் செயலை அதாவது சிலையை உடைத்த செயலை இச்சிலைகளில் பெரியது செய்தது' என்று கூறியது. மேலும், தனது மனைவி ஸாராவிடம், நம்ரூதின் தீங்கிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக 'அவனிடம் நான் உன் சகோதரன் என்று கூறு' என்று சொல்லியது. உண்மையில், அந்த மூன்று வார்த்தைகளும் நேரடி பொய்கள். அல்ல அவை மறைபொருள் கொண்ட பேச்சுகள் (மஆரீழ்) ஆகும். ஆனால் அவை வெளிப்படையாகப் பார்க்கும்போது பொய்யைப் போல தோன்றியதால், இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தம்மை மிகச் சிறியவராக எண்ணி, ஷஃபாஅத் (பரிந்துரை) செய்யத் தயங்கினார்கள். இருந்தாலும், அல்லாஹ்வை அதிகமாக அறிந்தவராகவும், அவனிடம் நெருக்கமான உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றவராகவும், அவனை அதிகம் அஞ்சி நடக்கக் கூடியவராகவும இருந்தார். அவ்வாறிருந்தும் அவர்: 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் என்று கூறினார். அவர்கள் பின்னர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர். அல்லாஹ் உங்களை தனது தூதுவத்தினாலும், தன்னுடன் நேரடியாகப் பேசியதாலும் மக்களிடையே உயர்த்திப் பெருமைப் படுத்தினான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுவார்கள்: இன்று என் இறைவன் எப்போதும் இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். நான் ஒருவரை (தவறுதலாக) கொன்றேன். அதற்கான அனுமதி எனக்கு அளிக்கப்படவில்லை. இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; மர்யத்தின் மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள். அவர்கள் பின்னர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் சென்று, 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வின் வார்த்தையாக மர்யத்திற்கு அளிக்கப்பட்டவரும், அவனிடமிருந்து வந்த ஆவியும் நீங்கள். நீங்கள் பாலக நிலையில் இருந்தபோதே மக்களுடன் பேசினீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறுவார்கள்: 'இன்று என் இறைவன் இதுவரை இல்லாத வகையில் கோபித்திருக்கிறான்; இதற்கு முன்னும் இவ்வாறு கோபித்ததில்லை; இதற்குப் பின்னும் இவ்வாறு கோபிக்கமாட்டான். என்று கூறிவிட்டு அவர் எந்தப் பாவத்தையும் குறிப்பிடாது, 'இப்போது எனக்கே பரிந்துரை தேவைப்படும் நிலை உள்ளது. நீங்கள் வேறு ஒருவரிடம் செல்லுங்கள்; முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செல்லுங்கள்.' என்று கூறுவார்கள். அவர்கள் பின்னர் முஹம்மது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, 'முஹம்ததே! நீங்கள் அல்லாஹ்வின் தூதரும், இறுதி நபியும் (நபிமார்களின் முத்திரையும் ஆவீர்கள். உங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாம் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்று காணவில்லையா?' என்று வேண்டிக் கொள்வார்கள். அப்போது நான் அர்ஷின் கீழ் சென்று, என் இறைவனுக்கு ஸஜ்தாவில் விழுவேன். அப்போது அல்லாஹ் எனக்கு முன்பு யாருக்கும் அளிக்காத வகையில், அவனைப் புகழ்ந்து போற்றும் சிறப்பான வார்த்தைகளை என் இதயத்தில் திறந்து தருவான். பின்னர் சொல்லப்படும்: 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள் — உங்களுக்கு வழங்கப்படும். பரிந்துரை செய்யுங்கள் — உங்கள் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்.' அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'என் சமூகத்தார் (உம்மத்), என் இறைவா! என் சமூகத்தார்! என் இறைவா! என் சமூகத்தார்!' என்று கூறுவேன்.' அவ்வாறு அவர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். அப்போது (நபி ஸல் அவர்களிடம்) சொல்லப்படும்: 'முஹம்மதே! உங்கள் உம்மத்தில் எந்த விசாரணையுமின்றி; (ஹிஸாப் இன்றி) சொர்க்கத்தில் நுழையக்கூடியவர்களை, சொர்க்கத்தின் வலப்பக்க வாயிலில் இருந்து உள்ளே அழைத்துச் செல்லுங்கள். மற்ற வாயில்களில் அவர்கள் மற்ற மக்களுடன் இணைந்தே நுழைவார்கள்'. பின்னர் அவர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் உயிர் எவனின் கையில் உள்ளதோ, அவனையே சத்தியமாகக் கொண்டு சொல்கிறேன்! சொர்க்கத்தின் ஒரு வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம், மக்கா மற்றும் ஸன்ஆ (யமன்) இடையேயான தூரம் போன்றது அல்லது மக்கா மற்றும் புஸ்ரா (ஷாமின் ஹவ்ரான் நரகம்) இடையேயான தூரம் போன்றது'.
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.
குப்ராவில் இமாம் நஸாஈயும், இமாம் இப்னு மாஜா அதே பொருளிலும், இமாம் அஹ்மதும் இதை பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கே உரிய ஆடைகளை அணிந்து பெண்களைப் போல் ஒத்திருக்கும் ஒவ்வொரு ஆண் மீதும் அவர்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட வேண்டி துஆ செய்தார்கள். அணியும் ஆடையானது வடிவம், நிறம், அணியும் முறை, அலங்காரம் அல்லது வேறு எந்த விதத்திலாயினும் பெண்களைப் போல் ஒத்திருப்பின் இந்த நபியவர்களின் சாபத்திற்கு உள்ளாகுவார். அதுபோலவே, ஆண்களுக்கே உரிய ஆடைகளை அணிந்து ஆண்களைப் போல் ஒத்திருக்கும் பெண் மீதும் இதே எச்சரிக்கை உள்ளது. இது பெரிய பாவங்களில் ஒன்றாகும்.