





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் ஒரு மலையில் இருந்து விழுந்து, தற்கொலை செய்துகொள்கின்றாரோ, அவர் நரக நெருப்பில், என்றென்றும் நிரந்தரமாக அடி ஆழத்திற்கு சென்று கொண்டே இருப்பார். யார் நஞ்சை அருந்தி, தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவரது நஞ்சு கையில் இருக்க, நரகநெருப்பில் அதை அருந்திக் கொண்டே என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார். யார் கூரிய ஓர் ஆயுதம் கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர், தனது கூரிய ஆயுதத்தால் தன்னைக் குத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நரகநெருப்பில் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் எச்சரிப்பதாவது, யாராவது ஒருவர் வேண்டுமென்றே தன் உயிரை மாய்த்துக் கொண்டால், அவர், அதற்கேற்ற கூலியாக, மறுமை நாளில் நரகநெருப்பில், இவ்வுலகில் எவ்வாறு தன்னை மாய்த்துக்கொண்டாரோ, அதே விதத்தில் தண்டிக்கப்படுவார். எனவே, யார் ஒரு மலையில் இருந்து விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர் மறுமையின் நரகத்தின் மலைகளில் இருந்து அதன் பள்ளத்தாக்குகளை நோக்கி நிரந்தரமாக விழுந்துகொண்டே இருப்பார். யார் நஞ்சை அருந்தி, தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவரது நஞ்சு கையில் இருக்க, நரக நெருப்பில் அதை அறுந்திக்கொண்டே என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார். யார் கூரிய ஓர் ஆயுதம் கொண்டு தன் வயிற்றில் குத்தி, உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர், தனது கூரிய ஆயுதத்தால் தனது வயிற்றில் குத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நரகநெருப்பில் என்றறென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ், தனது நிழலைத் தவிர வேறு நிழல்கள் இல்லாத அந்த (மறுமை) நாளில் ஏழு தரப்பினருக்கு தனது நிழலைக் கொடுப்பான் : நீதம் செலுத்தும் ஆட்சியாளன், அல்லாஹ்வை வணங்குவதிலேயே வளர்ந்த வாலிபன், தனது உள்ளத்தால் பள்ளிவாசல் களுடன் பிணைக்கப்பட்ட மனிதன். அல்லாஹ்வுக்காக நேசம்கொண்டு, அவனுக்காகவே சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள். ஒரு மனிதனை அழகும் மதிப்பும் கொண்ட ஒரு பெண் பாவத்திற்காக அழைக்க, அவர் 'அல்லாஹ்வை நான் பயப்படுகின்றேன்' என்று கூறிக் கொண்டவர். தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத அளவு மறைத்து, தருமம் செய்த மனிதர், அல்லாஹ்வைத் தனிமையில் நினைத்து, கண்ணீர் வடித்தவர்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், அல்லாஹ், தனது நிழலைத் தவிர வேறு நிழல்கள் இல்லாத அந்த (மறுமை) நாளில் ஏழு தரப்பினருக்கு தனது அர்ஷின் நிழலைக் கொடுப்பான் என நற்செய்தி கூறுகின்றார்கள் : முதலாமவர் : தன்னில் தீயவராக அல்லாத, நீதம் மிக்கவராகவும், தனது பிரஜைகளுக்கு மத்தியில் அநீதமிழைக்காது நீதம் செலுத்துபவராகவும் இருப்பவராகும். இங்கு நாடப்படுபவர், நாட்டுத் தலைவராகும். எனினும், முஸ்லிம்களின் ஏதாவது விவகாரங்களைப் பொறுப்பேற்று, அதில் நீதமாக நடந்துகொள்ளும் அனைவரும் இதனுள் வருவர். இரண்டாமவர் : அல்லாஹ்வை வணங்குவதிலேயே வளர்ந்த வாலிபன். மேலும் மரணிக்கும் வரை, தனது வாலிபத்தையும், பலத்தையும் அதிலேயே செலவழித்தவர். மூன்றாவது : தான் பள்ளியில் இருந்து வெளியேறியதும், மீண்டும் அதில் நுழையும் வரை அதனுடனேயே உள்ளம் பிணைக்கப்பட்டு இருக்கும் மனிதன். அதற்கான காரணம், அதன் மீதுள்ள ஆழ்ந்த நேசமும், அதில் அதிகமாக இருப்பதும், உடலில் ஏதாவது ஏற்பட்டாலும், பள்ளிவாசலுக்கு வெளியே இருந்தாலும், உள்ளத்தால் எப்போதும் அதிலேயே இருப்பதும் ஆகும். நான்காமவர் : உண்மையில் அல்லாஹ்வுக்காக மாத்திரமே தமக்கிடையில் நேசம் பாராட்டிக் கொண்ட இருவர். அவ்விருவரும் மரணம் வரும் வரை, எந்தவொரு உலக நோக்கங்களுக்காகவும் தமது இந்த மார்க்க நேசத்தை துண்டித்துக் கொள்ளாதவர்கள். உண்மையில் அவர்கள் ஒன்றிணைந்து இருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும் சரியே! ஐந்தாமவர் : நல்லகுடும்பமும், மதிப்பும், சிறப்பும், பணமும், அழகும் கொண்ட ஒரு பெண் மானக்கேடான ஒரு செயலில் ஈடுபடுவதற்காக அவரை அழைக்கும் போது, மறுத்து, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று கூறி விலகியவர். ஆறாமவர் : குறைவாகவோ, அதிகமாகவோ தர்மம் செய்யும் ஒரு மனிதர். மேலும், அதில் முகஸ்துதியுடன் செயற்படாமல், தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத அளவு மறைத்துக் கொடுத்தவர். ஏழாமவர் : மக்களை விட்டும் தனித்து இருக்கும் நிலையில், நாவினால் திக்ர் செய்தோ அல்லது உள்ளத்தால் அல்லாஹ்வை நினைவுபடுத்தியோ, அவன் மீதுள்ள அச்சத்தாலும், அவனது மகத்துவத்தை நினைத்தும் அழுதவர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: உங்களில் ஒருவர் தனது சகோதரனை நோக்கி ஆயுதத்தினால் சைக்கினை காட்டவேண்டாம். ஏனெனில், அவர் அறியாமலேயே ஷைத்தான் அவரது கையைத் உசுப்பிவிட, அவர் நரகப் படுகுழியில் போய் விழலாம்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை நோக்கி எவ்விதமான ஆயுதத்தையும் கொண்டு சைக்கினை செய்வதை எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவன் அறியாமலேயே, ஷைத்தான் அவனது கையில் ஆயுதத்தை உசுப்பத் தூண்டிவிட, அவன் தனது சகோதரனைக் கொலைசெய்யவோ அல்லது துன்புறுத்தவோ செய்யலாம். விளைவாக, நரகப் படுகுழியில் அவனைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பாவத்தில் அவன் வீழ்ந்துவிடலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்கப்பட்ட போது, 'எவனுடைய தீமைகளை விட்டும் அண்டைவீட்டான் அபயம் பெற வில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்இங்கு நபியவர்கள் மூன்று தடவை சத்தியம் செய்து, உறுதிப்பட. 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான்.' என்று கூறுகின்றார்கள். அப்போது நபித்தோழர்கள் அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்ட போது, 'எவனுடைய தீமைகளையும், சதியையும், அநியாயத்தையும் விட்டு அண்டைவீட்டான் அபயம் பெறவில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் மரண தருவாயை அடைந்த போது, அவர்களது பெரும்பாலான வஸிய்யத் 'தொழகையையும், உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவையையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள், 'தொழகையையும், உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவையையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,' என்றே காணப்பட்டது. எந்தளவுக்கென்றால், உயிர் பிரிய அண்மித்து, அவர்களால் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியாத நிலையிலும் அதையே கூறிக் கொண்டிருந்தார்கள்.
குப்ரா எனும் நூலில் இமாம் நஸாஈயும், இமாம் இப்னுமாஜாவும் இதை பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள் தமது மரண தருவாயில் இருக்கும் வேளைகளில் தமது உம்மத்திற்காக அதிகம் செய்த வஸிய்யத்தாக பின்வரும் விடயங்களே காணப்பட்டன: "தொழுகையைப் பற்றிக் கொள்ளுங்கள். அதனைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றில் பராமுகமாக இருந்து விடாதீர்கள். இதேபோன்று, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட, ஆண், பெண் அடிமைகளது கடமைகளை சரியாக நிறைவேற்றி, அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்." இவ்வாறே, உயிர் பிரிய அண்மித்து, அவர்களால் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியாத நிலையிலும் அதையே கூறிக் கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'தங்கத்திற்குத் தங்கத்தையோ,வெள்ளிக்கு வெள்ளியையோ, கோதுமையை கோதுமைக்கோ, வாற்கோதுமையை வாற்கோதுமைக்கோ, ஈத்தம் பழத்தை ஈத்தம் பழத்திற்கோ உப்பை உப்பிற்கோ, ஒரே மாதிரியாக, சரிநிகராக, உடனுக்குடன் கையகப்படுத்திக்கொள்ளும் நிலையில் விற்பனை செய்யுங்கள்! இவ்வினங்கள் வித்தியாசப்பட்டால் நேரடியாக, உடனுக்குடன் விரும்பியவாறு விற்பனை செய்யுங்கள்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்வட்டி ஏற்பட வாய்ப்புள்ள பொருட்களான, தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தம்பழம், உப்பு ஆகியவற்றில் எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் இங்கு தெளிவு படுத்துகின்றார்கள். தங்கத்திற்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி போன்று, ஒரே இனத்தில் விற்பனை செய்வதாக இருந்தால் பின்வரும் இரு நிபந்தனைகள் அவசியமாகும் : முதலாவது : தங்கம் மற்றும் வெள்ளி போன்று நிறுக்கப்படுபவையாக இருந்தால், நிறையில் சமனாக இருத்தல், கோதுமை, வாற்கோதுமை, ஈத்தாம்பழம் மற்றும் உப்பு போன்று, அளக்கப் படுபவையாக இருந்தால், அளவையில் சமமாக இருக்க வேண்டும். இரண்டாவது : வியாபாரம் நடக்கும் அதே இடத்தில், விற்பவர் பெறுமதியையும், வாங்குபவர் பொருளையும் கையகப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தை வெள்ளிக்கோ, ஈச்சம்பழத்தை கோதுமைக்கோ விற்பது போன்று இந்த இனங்கள் வேறுபட்டால், (இந்நிலையில்) ஒரு நிபந்தனையுடன் வியாபாரம் செய்யலாம். அதாவது, வியாபாரி பெறுமதியையும், வாங்குபவர் பொருளையும் வியாபாரம் நடைபெறும் இடத்தில் கையகப் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால், அவர்கள் தடுக்கப்பட்ட வட்டியில் வீழ்ந்து விடுவார்கள். அதில் விற்பவரும், வாங்குபவரும் சமமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கரண்டைக்காலை விட்டும் கீழே செல்லும் கீழாடை நரகிலேயே இருக்கும்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்இதில் நபியவர்கள், ஆண்கள் தமது உடம்பின் கீழ்ப் பகுதியில் அணியும் காற்சட்டை போன்ற எந்த ஆடையையும் கரண்டைக் கால்களுக்குக் கீழால் அணிவதை விட்டும் எச்சரிக்கின்றார்கள். அதற்கான தண்டனையாக, அவ்வாறு கீழாடைகளை அணிபவர்களது கரண்டைக் காலுக்குக் கீழால் உள்ள பாதம் போன்றவை நரகத்திலேயே இருக்கும்.
அமீருல் முஃமினீன் அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால், அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்றிருந்தால் அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்'.
ஹதீஸ் கலை இமாம்களான புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்துள்ளனர். இவர்களின் இவ்விரு புத்தகங்களும் மிகவும் சரியான தரத்தில் அமைந்த புத்தகங்களாகும்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து செயற்பாடுகளும் நிய்யத்தைக் கொண்டே கணிக்கப்ப்படுவதாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த சட்டமானது வணக்கங்கள் நடைமுறை சார்ந்த விடயங்கள் அனைத்திற்கும் பொதுவானது. யார் தனது செயற்பாட்டினூடாக உலகியல் நலனை நாடினால் அவர் அதை மாத்திரமே அடைந்துகொள்வார். அவருக்கு எந்த கூலியும் கிடையாது. யார் தனது செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறரோ, அவரின் அந்த செயலுக்கு வெகுமதியும் கூலியும் கிடைக்கும். குறிப்பிட்ட அந்த செயல் குடித்தல் சாப்பிடுதல் போன்ற அன்றாட செயல்களாக இருந்தாலும் சரியே. வெளிப்படையில் குறித்த செயலானது ஒரே மாதிரியாக இருந்தாலும் நிய்யத் -எண்ணமானது எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் குறிப்பிடுகையில் யார் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே நாடி தனது தாயகத்தை துறந்து (ஹிஜ்ரத்) செல்கிறரோ அவரின் ஹிஜ்ரத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தாகும். அவரின் உண்மையான நிய்யத்திற்கு கூலி வழங்கப்படும். யார் தனது ஹிஜ்ரத்தின் போது உலகியல் நலன்களான செல்வம், அல்லது புகழ் அல்லது வியாபாரம் அல்லது மனைவி போன்ற விடயங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் சென்றிருந்தால் அவரின் நிய்யத்தில் (எண்ணத்தில்) அவர் அடைந்து கொள்ள விரும்பும் நலனைத் தவிர வேறு எதனையும் அடைந்து கொள்ளமாட்டார். அவருக்கு எந்த வெகுமதியோ கூலியோ கிடைக்காது என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக நுஃமான் பின் பஷீர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்: ஹலாலும் (ஆகுமானவைகள்) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமான விடயத்தில் விழுந்து விடுகிறாரோ அவர்; ஹராத்தில் விழுந்து விட்டவராவார். இது தனது மந்தையை அனுமதிக்கப்படாத ஒரு வேலிக்கருகாமையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனின் செயற்பாட்டை ஒத்ததாகும். அந்தக் கால் நடைகள் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆக, அதிகாரம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய ஒரு பாதுகாப்பு எல்லை உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு எல்லை, அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும். அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்மனித நடவடிக்கைள் அல்லது விவகாரங்களில் ஒரு பொது விதி குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இங்கு தெளிவுபடுத்துகிறார்கள். அந்த விதியானது இஸ்லாமிய சட்ட ஒழுங்கில் அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன : தெளிவான ஹலால், தெளிவான ஹராம், ஹலாலிற்கும் ஹராத்திற்கும் மத்தியில் உள்ள தெளிவற்றதும் சந்தேகத்திற்கிடமானதும் , மக்களில் அதிகமானோர் அவற்றின் சட்டம் குறித்து அறியாத விடயங்கள். ஆகவே, யார் மார்க்க விடயங்களில் சந்தேகமான விடயங்களை விட்டுவிடுகிறாறோ ஹராத்தில் விழுவதிலிருந்து விலகி தனது மார்க்கத்தை காப்பாற்றிக் கொண்டார். இதனைச் செய்வதால் மக்களிடமிருந்து வரும் குறை, விமர்சனப் பேச்சுக்களை விட்டும் இவரது மானமும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றது. சந்தேகமானவற்றைத் தவிர்ந்து கொள்ளாதவர் ஒன்றோ ஹராத்தில் வீழ்ந்திடுவார், அல்லது மக்களின் இழி பேச்சிற்கும் ஆளாவார். மார்க்க விவகாரங்களில் சந்தேகமான விடயங்களை புரிபவரின் நிலையை தெளிவு படுத்த பின்வரும் ஒர் உதாரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரம் நில உரிமையாளரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்ட ஓர் நிலத்திற்கருகில் கால் நடைகளை மேய விட்டவனைப் போன்றாகும். அதற்கருகில் மேய்வதால் அப்பிராணிகள் அப்பாதுகாப்பு வேலிக்குள் சென்று மேய வாய்ப்புள்ளது. இவ்வாறுதான்; சந்தேகமானதைச் செய்பவனும், அதன் மூலம் தெளிவான ஹராத்திற்கு அருகில் நெருங்கி, அதில் வீழ்ந்திட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உடலில் இதயம் எனும் ஒரு சதைத்துண்டு இருப்பதாகவும், அது சீரானால் முழு உடலும் சீராகிவிடும் எனவும் அது கெட்டுப்போனால் முழு உடலும் கெட்டு விடும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.